காரையாறு வனப்பகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாமி தரிசனம் செய்தார்.;
காரையாறு வனப்பகுதி மற்றும் சேர்வலாறு அணை பகுதிகளை தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து நேற்றைய தினம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றைய தினம் காரையாறு, சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து வெளியேற்றம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, நீர்வரத்து சேமிப்பது, விவசாய பாசனத்திற்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காரையார்-மணிமுத்தாறு அணையை இணைப்பது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் காரையாறு பகுதிகளில் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா, முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர் ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.