தென்காசி: சாலை விபத்தில் வாலிபர் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்

தென்காசியில் இருந்து செங்கோட்டை சென்று கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக வேகத்தடையின் மீது சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் வாலிபர் சுயநினைவை இழந்தார்.;

Update:2025-07-25 22:25 IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா, பிரானூர் பார்டர் பகுதியைச் சோந்த வைரமுத்து (வயது 31), கேரளாவில் லாட்டரி கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 15.7.2025 அன்று இரவு 11 மணியளவில் தனது மோட்டார் பைக்கில் தென்காசி டவுண் பகுதியிலிருந்து செங்கோட்டை சென்று கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக வேகத்தடையின் மீது சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் சுயநினைவின்றி தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளித்தபின், மேல் சிகிச்சைக்காக 16.7.2025 அன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

பின்னர் உறவினர் சொந்த விருப்பத்தில் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் 24.7.2825 அன்று காலை 10 மணியளவில் திரும்பவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அவரை அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதை தெளிவாக எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து 24.7.2025 அன்று அவருக்கு மூளை செயல்பாடு இருக்கிறதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை முடிவில் அவருடைய மூளை செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர். பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆலோசித்து வைரமுத்துவின் உடல் உறுப்புகளான கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கருவிழிகள், தோல் ஆகியவற்றை தானமாக ெகாடுக்க சம்மதம் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து வைரமுத்துவிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல் திருச்சியிலுள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சி, தென்னூரில் உள்ள காவேரி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கருவிழிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள கிரேஸ் கென்னட் பவுண்டேசனுக்கும் தானமாக அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் வைரமுத்துவின் உடலுக்கு அரசு சார்பில் மருத்துவர்கள் மரியாதை செலுத்தியபின், அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்