ராமதாஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியை புறக்கணித்த அன்புமணி

பாமக எனும் கட்சியின் அதிகார மையத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி அரசியல், குடும்ப நிகழ்வுகளிலும் எதிரொலித்துள்ளது;

Update:2025-07-25 21:26 IST

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்காக அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியை விட்டு நீக்கி வரும் நிலையில், மாவட்டம் தோறும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், அன்புமணி நடைபயணத்திற்கு அனுமதி காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை அன்புமணி துவங்கி உள்ளார். திருப்போரூர் முருகன் கோயிலில் இருந்து தேர்தல் பிரச்சார நடைபயணத்தை துவக்கினார். அன்புமணியின் நடைபயணம் 100 நாள்கள் நடைபெற உள்ளது.

அன்புமணி நடைபயணத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில் ராமதாஸ் பெயரில்லை.

ராமதாசின் வழியில் அவரது கனவுகளை நிறைவேற்றவே இந்த நடைபயணம். மக்களுக்கு உரிமையை தராக திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் தொடக்கமே இந்த நடைபயணம் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

இதனிடையே தமிழக அரசியலில் மூத்த தலைவரான பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 87வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியை அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தாக கூறப்படுகிறது. ஏற்கனவே தைலாபுரத்தில் கடந்த 24-ம் தேதி மாலை நடைபெற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதியின் 60-வது திருமண நாள் நிகழ்ச்சியை பாமக தலைவர் அன்புமணி - சவுமியா குடும்பத்தினர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. பாமக எனும் கட்சியின் அதிகார மையத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி அரசியல், குடும்ப நிகழ்வுகளிலும் எதிரொலித்துள்ளது பாமக நிர்வாகிகள்,தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்