நெல்லையில் ஐ.டி. ஊழியர் படுகொலை; போலீஸ் எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்

கவின்குமார் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.;

Update:2025-07-29 13:43 IST

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 26). இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதனிடையே, சொந்த ஊருக்கு சென்ற கவின்குமார் நேற்றுமுன்தினம் நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் கவின்குமாரை வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கவின்குமாரை கொலை செய்த சுர்ஜித் போலீசில் சரண் அடைந்தார்.

சுர்ஜித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது அக்காளை கவின்குமார் காதலித்ததாகவும், காதலை கைவிடுமாறு கூறியதாகவும் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து சுர்ஜித்தை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், கவின்குமார் காதலித்த இளம்பெண் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் (எஸ்.ஐ.) சரவணன், கிருஷ்ணகுமாரியின் மகள் என்பது தெரியவந்தது. போலீஸ் தம்பதியின் மகனான சுர்ஜித் தனது அக்காளை காதலித்த கவின்குமாரை கொலை செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் பூதாகாரமான நிலையில் கவின்குமாரின் உடலை வாங்க மறுத்து ஆறுமுகமங்கலம் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை, இந்த கொலை தொடர்பாக எஸ்.ஐ. தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி மீது போலீசார் நேற்று வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், நெல்லையில் ஐ.டி.ஊழியர் கவின்குமார் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நெல்லையில் ஐ.டி.ஊழியர் கொலை வழக்கின் முழு விவரம்:-

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் (வயது 24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். அப்போது அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார் (வயது 26) படித்துள்ளார்.

அப்போது, பள்ளியிலேயே 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த கவின்குமார் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதையடுத்து, கவின்குமார் அடிக்கடி ஏரலில் இருந்து பைக்கில் பாளையங்கோட்டைக்கு சென்று தனது காதலியை சந்தித்து பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

இதனை எப்படியோ கவின்குமார் காதலியின் தம்பி சுர்ஜித் அறிந்துகொண்டார். இதற்கிடையே தாத்தாவிற்கு சிகிச்சை முடிந்ததும் கவின்குமார் சொந்த ஊருக்கு செல்வதற்காக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த சுர்ஜித், கவின்குமாரை பேச அழைத்துள்ளார். அப்போது, திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின்குமாரை சரமாரி வெட்டிவிட்டு தப்பிஓடினார். இதில் படுகாயம் அடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொல்லப்பட்ட கவின்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் கவின்குமாரை கொலை செய்த சுர்ஜித் போலீசில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்