சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
போராட்டத்தால் தேங்கும் குப்பை காரணமாக நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
கோவை ,
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கோவையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் நகராட்சியில் இருக்கக்கூடிய, 27 வார்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில், பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில, இன்று காலை, தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு, ஊதிய உயர்வு, வழங்க வேண்டும் என சொல்லி, காரமடை நகராட்சி வளாகத்தில் அமர்ந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த போராட்டம் காரணமாக, காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய, குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்திருக்குகிறது. அவ்வப்போது, மழை பெய்து வரக்கூடிய சூழ்நிலையில், தேங்கும் குப்பை காரணமாக நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.