தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது பட்டாசு: காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வரும் ஒரு மாணவன் கல்லூரிக்கு நாட்டு வெடியை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது நண்பர்கள் அந்த வெடியின் திரியை இழுத்தபோது, அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வெடி வெடித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது பட்டாசு என மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று அங்கு சோதனை செய்ததில், அது ஒரு மாணவரால் கொண்டுவரப்பட்ட பட்டாசு வெடித்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இது சம்பந்தமாக விசாரணையில் உள்ள நிலையில், தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.