கூட்டணிக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி... விஜய், சீமான் நிராகரிப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்தகால தேர்தலை போலவே தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறது.
நடிகர் விஜய்யின் தவெக தேர்தல் களத்திற்கு புதிது. திமுக-பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கடந்த செயற்குழு கூட்டத்தில் விஜய் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அப்படியென்றால் அதிமுகவுடன் விஜய் கட்சி கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதால், அதிமுகவுடன், தவெக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் விஜய்யின் அறிவிப்பு, சீமானின் தனித்து போட்டி என்ற விடாப்பிடி கொள்கை ஆகியவற்றால் 4 முனை போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது. இந்த சூழலில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது? என்பது குறித்த வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 2026-ல்தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறினார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தாங்கள் கூட்டணியில் இணையுமாறு அழைத்த எடப்பாடி பழனிசாமி அழைப்பை தவெக தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிராகரித்துள்ளனர்.
தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி அழைப்பு குறித்து சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "தேர்தலுக்காக கொள்கைகளை விடுத்து கூட்டணி அமைத்த எத்தனையோ கட்சிகள் காணாமல் போயுள்ளன. அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி இடம் பெறாது. நாங்கள் என்றைக்குமே தனித்து தான் போட்டியிடுவோம். தீமையை வைத்து தீமையை எப்படி அழிக்க முடியும்?. தமிழகத்தில் தேசியக் கட்சிகள் எதற்காக?. நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது, நாங்கள் சீராக இருப்போம்; திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாங்கள்" என்று கூறினார்.
இதன்மூலம் கூட்டணியில் சேர எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை இரு கட்சித் தலைவர்களும் நிராகரித்துள்ளனர்.