கோவை: வாகமலை எஸ்டேட்டில் மருத்துவமனையை சூறையாடிய யானைகள்

வாகைமலை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.;

Update:2025-08-13 19:30 IST

கோவை மாவட்டம், வால்பாறை அருகே தேயிலை எஸ்டேட்கள் உள்ளது. அதன் அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன. இந்ந நிலையில் அருகிலுள்ள வனப் பகுதிகளிலிருந்து யானைகள் இரை, தண்ணீர் உள்ளிட்ட தேவைகள் மற்றும் பல காரணங்களால் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சில நேரங்களில் புகுந்து விடுகின்றன. அந்த யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகள், அருகிலுள்ள வயல்வெளிகள் போன்றவற்றை சேதப்படுத்துகின்றன.

இதனை தொடர்ந்து, தேயிலை தோட்டம் அருகே வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் யானை வலம்வரும் பாதைகள், தண்ணீர் தேடும் இடங்கள் போன்ற தகவல்கள் மூலம் யானைகளை தொடர்ந்து கண்காணித்து, அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வால்பாறை அருகே, வாகமலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையை காட்டு யானைகள் சூறையாடியுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையில் கட்டிடங்கள் உடைந்துள்ளதோடு, பல்வேறு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை சிதறிக் கிடந்தன. பின்னர் இதுகுறித்து அந்த மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த தகவலின்பேரில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் யானைகள் இதுபோல் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்து அவர்களின் உடைமைகளை சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்