த.வெ.க. கொடிக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி

கொடியை பயன்படுத்த த.வெ.க.விற்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.;

Update:2025-08-18 14:03 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ‘சிவப்பு, மஞ்சள், சிவப்பு’ நிறத்திலான கொடி தங்கள் சபையின் கொடியை போல் இருப்பதாகவும், எனவே அதனை பயன்படுத்த அக்கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி சென்னை ஐகோர்ட்டில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, 80 லட்சம் உறுப்பினர் கொண்ட த.வெ.க., தங்களுடைய சிறிய அமைப்பான தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை விழுங்க அனுமதிக்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தங்கள் சபையின் கொடியையும், த.வெ.க. கொடியையும் ஒப்பிடும்போது குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம், த.வெ.க. கொடியால் தங்களுக்கு எவ்வாறு இழப்பு ஏற்படும் என மனுதாரர் விளக்காததால் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என த.வெ.க. தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடியை த.வெ.க. பயன்படுத்தியுள்ளது என கூற முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், 2 கொடிகளையும் ஒப்பிடும்போது த.வெ.க. கொடியால் குழப்பம் ஏற்படும் என சொல்ல முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்