சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு : செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி

எம்பி, எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரணை முடியும் வரை வழக்கை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.;

Update:2025-08-12 19:46 IST

சென்னை,

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளருமான கார்த்திகேயன் என்பவர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது உதவியாளர் கார்த்திகேயன் தரப்பில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக எம்பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி உள்ளிடோர் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பில், விசாரணை பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்