13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிப்பு
13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்களை அதிகரிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் (இளங்கலை மருத்துவம்) மற்றும் பி.டி.எஸ். (பல் மருத்துவம்) பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரையில் பெறப்பட்டது. அதில் மொத்தம் 72 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒரு சில விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க மாணவர்கள் மறந்துவிட்டனர். அவர்களுக்கு 2 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டது. இந்த 2 நாளில் சான்றிதழ்களை இணைத்து மீண்டும் தந்தால் அந்த விண்ணப்பங்கள் சரி பார்த்து தகுதி பட்டியலில் சேர்க்கப்படும்.
தகுதி பட்டியல் சரிபார்க்கப்பட்டபோது 20 பேர் போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்தது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, இந்த 20 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 3 ஆண்டுகள் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கிறது.
20 மாணவர்களில் 7 மாணவர்கள் பிறப்பிட சான்றிதழ்களையும், 9 மாணவர்கள் பிறப்பிட சான்றிதழ்கள் மற்றும் சாதி சான்றிதழ்களையும், 4 மாணவர்கள் என்.ஆர்.ஐ. தகுதிக்கான தூதரக சான்றிதழ்களையும் போலியாக தந்துள்ளனர்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை முடிந்து இறுதி பட்டியல் வரும் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அதன்பின், மத்திய அரசின் கால அட்டவணைப்படி வரும் 30-ந் தேதி காலை 10 மணி முதல் கலந்தாய்வு தொடங்கப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் 13 மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக பாடப்பிரிவு தொடங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளோம். இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் 13 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில், முதுநிலை பட்ட மேற்படிப்புகளில் 488 இடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் கூடுதல் இடங்கள் நடைமுறைக்கு வரும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.