கவர்னருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யவில்லை - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.;

Update:2025-08-19 17:35 IST

டெல்லி,

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களை கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை எதிர்த்தும், மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவதை எதிர்த்தும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 8ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர் ஒரு மாதத்துக்குள்ளும், கவர்னர் அனுப்பிவைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்த சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே, மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்த தீர்ப்பில் விளக்கம்கோரி ஜனாதிபதி 14 கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டில் எழுப்பினார். இந்த கேள்விகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கவர்னர்கள், அனைத்து மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்பை மறு ஆய்வு செய்யவில்லை என்று தலைமை நீதிபதி கவாய் தெரிவித்தார்.

மேலும், அந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் குறித்தே வாதங்களைக் கேட்கிறோம் என தலைமை நீதிபதி விளக்கம் அளித்தார்.

இதனை தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பிலேயே ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் உள்ளது என வாதிட்டார். அதேபோல், காவிரி, குஜராத் சட்டசபை வழக்குகளில் ஜனாதிபதி மூலம் எழுப்பிய கேள்விகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்த விளக்கம் கோரிய மனுவையும் திரும்ப அனுப்ப வேண்டும் என கேரள அரசு சார்பில் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து, வாதிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்தது அரசின் பணியில் தலையிடுவதாக உள்ளது. ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளை, தீர்ப்பின் மேல்முறையீடாக பார்க்க வேண்டாம். சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி எதிர்பார்க்கிறார் என்றே பார்க்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மசோதா விவகாரங்களில் கவர்னர் அக்கறை காட்டவில்லை என பலமுறை சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. மோசமான சூழ்நிலை வந்த பின்னர்தான், அதனை சரிசெய்ய சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டது என்று கூறினர். இதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்