எதிர்கால திட்டங்களுக்காக 50 விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவை உருவாக்கவேண்டும் - பிரதமர் மோடி

பிரதமர் மோடியை விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்தித்தார்.;

Update:2025-08-19 16:06 IST

டெல்லி,

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39). இவர் கடந்த ஜூன் 25-ந்தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தில், சுக்லாவுடன் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோரும் இணைந்து கொண்டனர். அவர்கள் 4 பேரும் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள்வரை தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.

ஆராய்ச்சி பணி நிறைவடைந்ததும், கடந்த ஜூலை 15-ந்தேதி சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்பினர். இதன் மூலம், 41 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.

இதனிடையே, விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து நேற்று இந்தியா வந்தார். அவர் நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது விண்வெளி பயணம் குறித்த அனுபவத்தை சுக்லாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இந்நிலையில், நாட்டின் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்காக 50 விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவை உருவாக்கவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுபான்ஷு சுக்லாவுடனான உரையாடலின்போது பிரதமர் மோடி கூறுகையில்,

இந்தியாவின் எதிர்கால விண்வெளி திட்டங்களை அமல்படுத்த 40 முதல் 50 விண்வெளி வீரர்கள் கொண்ட குழுவை உருவாக்கி தயார் நிலையில் வைக்க வேண்டும். சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் எதிகால விண்வெளி திட்டங்களுக்கான முதல் அடி. தற்போதுவரை வெகுசில குழந்தைகளே விண்வெளி வீரர் ஆகவேண்டும் என நினைத்தனர். ஆனால், சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தை தொடர்ந்து பல குழந்தைகள் விண்வெளி துறையில் ஆர்வம்காட்டி வருகின்றனர். மேலும், அந்த துறையில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ககன்யான் மற்றும் இந்திய விண்வெளி நிலையம் ஆகிய விண்வெளி துறையில் இந்தியாவின் 2 முக்கிய பணிகளாகும். சுக்லாவின் விண்வெளி பயண அனுபவம் இந்த 2 பணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்