கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண்கள் கூட்டத்தில் புர்காவுடன் புகுந்த நபரால் பரபரப்பு
போலீசார் விசாரித்தபோது, மனைவியை தேடி கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.;
ராஞ்சி,
ஜார்கண்டில் ராஞ்சி நகரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கலாசார நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், கவர்னர் கலந்து கொள்ள இருந்த நிலையில், புர்கா அணிந்தபடி சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் சென்றுள்ளார். அவர் பெண்கள் இருந்த பகுதிக்குள் புகுந்துள்ளார்.
இதனை கவனித்து சந்தேகமடைந்த நுஸ்ரத் பர்வீன் என்ற பெண், போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, நிகழ்ச்சியின்போது இடையே, மருந்து வாங்குவதற்காக அந்த நபர் வெளியேறி சென்றார். அவருடைய நடவடிக்கை வேறுபட்டு இருந்தது. நடந்து போவது, அடியெடுத்து வைப்பது என அவர் ஒரு பெண் கிடையாது. ஆண் என நான் உணர்ந்தேன்.
அவர் கூட்டத்தில் இருந்து வெளியேற முற்பட்டதும், அருகேயிருந்த போலீசாரை நான் உஷார்படுத்தினேன் என்றார். அவர் பள்ளிக்கூடம் அருகே ரிக்சா ஒன்றில் ஏற முயன்றபோது, அவரை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அவரை கீழே இறங்க கூறினோம். அவரின் புர்காவை அகற்றியபோது, அவர் ஆண் என தெரிய வந்தது.
முதலில் அவர் கூறும்போது, மனைவியை தேடி கொண்டு இருக்கிறேன் என்றார். ஆனால், இது அமைதியை சீர்குலைப்பதற்கான சதி திட்டமே தவிர வேறு எதுவும் இல்லை. புர்காவில் இருந்தது ஒரு முஸ்லிம் பெண் என்றால், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க போவது இல்லை. ஆனால், மாற்று மத நம்பிக்கை கொண்ட ஒரு நபர் இதுபோன்று நடந்து கொண்டது சந்தேகம் எழுப்புகிறது என்றார்.
இந்த சம்பவம் பற்றி கொத்வாலி காவல் நிலைய உயரதிகாரி ஒருவர் கூறும்போது, கிருஷ்ண ஜெயந்தியன்று கவர்னரின் நிகழ்ச்சியில் சந்தேகத்திற்குரிய வகையில், ஜீன்ஸ் அணிந்த நபர் ஒருவர் புர்காவுடன் வந்துள்ளார். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்து இருக்கிறோம்.
தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். சமூக நல்லிணக்க சீர்குலைவுக்கான நோக்கமே இந்த செயல் என்றும் அவர் கூறினார். கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் கூட்டத்தில் நபர் ஒருவர் புர்காவுடன் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.