ராகுல் காந்தி எந்த தாக்குதலுக்கும் பயப்படமாட்டார்: பிரியங்கா காந்தி
"எந்த தாக்குதலுக்கும் ராகுல் காந்தி பயப்படமாட்டார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்;
பாட்னா,
பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது: வாக்குத் திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உண்மையைத் தெரிவிக்க வேண்டும். ராகுல் காந்தி எந்த தாக்குதலுக்கும் பயப்படமாட்டார். அவர் எல்லாவற்றையும் சமாளிப்பார். ஒருபோதும் பின்வாங்கமாட்டார். ராகுல் காந்தியால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. மாறாக, பிரமாணப் பத்திரம், நேரு, இந்திரா என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த 10-11 ஆண்டுகளில் தங்கள் பொறுப்பிலிருந்து நழுவுவதற்காக பாஜகவினர், நேருவை பல விஷயங்களுக்கு குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு இன்று என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பேச வேண்டும். பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் ஏன் செய்யப்படுகிறது என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும், வாக்குத் திருட்டு பிரச்னை பற்றி பேச வேண்டும். வாக்குத் திருட்டு உண்மையல்ல என்றால் மக்களிடம் சொல்லுங்கள்" என்று கூறினார்