கனமழையால் மிதக்கும் மும்பை; புறநகர் ரெயில் சேவை பாதிப்பு

வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மும்பையில் சாலை, ரெயில் போக்குவரத்து முடங்கியது. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.;

Update:2025-08-19 19:49 IST

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு தற்போது கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. தலைநகர் மும்பையில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. போரிவலி, அந்தேரி, சியோன், தாதர், செம்பூர் உள்ளிட்ட நகரத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது, இன்று காலையிலும் மழை தொடர்ந்தது, இதன் விளைவாக காந்தி சந்தை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

சாலைகள் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளித்ததால் வாகனங்கள் மிதந்தபடி சென்றன. பல இடங்களில் பஸ்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டன. பல இடங்களில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் மும்பையில் மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை நிலவியதால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. மும்பைக்கு வரவேண்டிய பல விமானங்கள் தாமதமாக தரை இறங்கின. 5 விமானங்கள் வேறு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர்.

பலத்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. மும்பை பல்கலைக்கழகம் தேர்வுகளை தள்ளி வைத்துள்ளது. அரசு மற்றும் பல்வேறு தனியார் அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது.

Tags:    

மேலும் செய்திகள்