மும்பை: மின் விநியோக பாதிப்பால் நடுவழியில் நின்ற மோனோ ரெயில்; பயணிகள் அவதி
மும்பை பெருநகர மாநகராட்சி குழுவினரும் சம்பவ பகுதிக்கு சென்று பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.;
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் மோனோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மைசூர் காலனி ரெயில் நிலையம் அருகே வந்தபோது, மோனோ ரெயிலுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டது. இதனால், ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. மோனோ ரெயில் நடுவழியிலேயே நின்று பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
இதனை தொடர்ந்து தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து மும்பை பெருநகர மாநகராட்சி குழுவினரும் சம்பவ பகுதிக்கு சென்று பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால் மும்பை திணறி வரும் சூழலில், இரவு நேரம் ஆகி விட்ட நிலையில், மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி ரெயிலில் இருந்து மீட்கப்பட்ட நபர் ஒருவர் கூறும்போது, பயணிகள் பொறுமையுடன் உள்ளனர். ரெயிலில் பல மூத்த குடிமக்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் உள்ளனர். அவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். ரெயிலுக்குள் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. அது அதிக பாதிப்பை தருகிறது என கூறியுள்ளார்.