பிரதமர் மோடியுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

இந்தியா-சீனா உறவுகள் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.;

Update:2025-08-19 23:09 IST

புதுடெல்லி,

சீன வெளியுறவு மந்திரியான வாங் யீ இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார். அவர் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வாங் யீ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து இருவரும் கலந்து ஆலோசித்தனர்.

இந்நிலையில், எல்லையில் சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியை டெல்லியில் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ சந்தித்து பேசினார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணம் குறித்து பிரதமர் மோடியுடன் வாங் யீ பேசினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கடந்த ஆண்டு கசானில் அதிபர் ஜின்பிங் உடனான எனது சந்திப்பிலிருந்து, இந்தியா-சீனா உறவுகள் முன்னேற்றத்தை அடைந்துள்ளன. எஸ்சிஓ உச்சிமாநாட்டின் போது தியான்ஜினில் நடைபெறும் எங்கள் அடுத்த சந்திப்பை நான் எதிர்நோக்குகிறேன்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான, ஆக்கபூர்வமான உறவுகள், உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்