வெப் சீரிஸ் பார்த்து கொலைக்கு திட்டம்: நண்பர்களுடன் சேர்ந்து கணவனை காலி செய்த மனைவி
ராஜஸ்தானில், ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை, மனைவி திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.;
ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சந்தோஷ் தேவி. இவரது கணவர் மனோஜ், இ-ரிக்ஷா ஓட்டி வருகிறார். சந்தோஷ் தேவி அங்குள்ள ஒரு பெட்ஷீட் தயாரிப்பு ஆலையில் வேலை செய்து வருகிறார்.சந்தோஷ் தேவியை அவரது கணவர் மனோஜ், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் மனம் வெதும்பிய சந்தோஷ் தேவிக்கு தொழிற்சாலையில் தன்னுடன் பணியாற்றும் ஊழியருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.
இந்த நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமைகளை நண்பரான ரிஷி ஸ்ரீவத்ஸவாவிடம் சந்தோஷ் தேவி கூறியுள்ளார். பின்னர், தனது கணவரை கொலை செய்ய தனது நண்பர் ரிஷி ஸ்ரீவத்ஸவாவுடன் சேர்ந்து திட்டமிட்டு இருக்கிறார். கொலை செய்வது எப்படி என்று இருவரும் கூகுளில் தேடியுள்ளனர். ஆனால், அதற்கான பதில் கிடைக்காததால் கிரைம் வெப் சீரிஸ்களை பார்த்துள்ளனர். அதில் கிடைத்த யோசனைகளை வைத்து கொலை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் திட்டமாகும்.
தங்கள் திட்டப்படி ரிஷி ஸ்ரீவத்ஸவா, தேவியின் கணவர் மனோஜை இ-ரிக்ஷாவுடன் வாடகைக்கு அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் ரிஷி ஸ்ரீவத்ஸவாவின் நண்பர் மோகித் சர்மாவும் ரிக்ஷாவில் ஏறியுள்ளனர்.இருவரும் சேர்ந்து மனோஜை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்றதும் ஏற்கனவே திட்டமிட்டபடி மனோஜை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். அங்கிருந்து தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு, சிம் கார்டுகளை தூக்கி எறிந்து வைத்து தப்பிச் சென்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கேமரா பதிவுகளை வைத்து கொலையாளிகளை பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.