மும்பையில் உறியடி திருவிழா: 10 அடுக்கு ‘மனித பிரமிடு’ அமைத்து உலக சாதனை
மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று கோவிந்தா குழுவினரை உற்சாகப்படுத்தினர்.;
மகா விஷ்ணுவின் 9-வது அவதாரமான கிருஷ்ணரின் அவதார தினத்தை கொண்டாடும் விழாவான கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம், பூஜை, வழிபாடு செய்வதோடு, கிருஷ்ண லீலைகள் தொடர்பான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் மராட்டியத்தில், குறிப்பாக மாநில தலைநகர் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ‘தஹிகண்டி’ (தயிர்பானை உடைப்பு) எனப்படும் உறியடி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக அந்தரத்தில் தொங்கவிடப்படும் தயிர்பானையை உடைக்க ‘கோவிந்தா’ என அழைக்கப்படும் பக்தர்கள் குழுவினர் பல அடுக்கு மனித பிரமிடு அமைத்து அசத்துகிறார்கள். அந்தவகையில் நேற்று மும்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உறியடி திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. குறிப்பாக மும்பையில் தாதர், ஒர்லி, காட்கோபர் மற்றும் தானே உள்ளிட்ட பகுதிகளில் உறியடி கொண்டாட்டம் களைகட்டியது.
தானேயில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று கோவிந்தா குழுவினரை உற்சாகப்படுத்தினர்.
இதற்கிடையே தானேயில் நடந்த உறியடி திருவிழாவில் கொங்கன் நகர் ராஜா கோவிந்தா குழுவினர் 10 அடுக்கு மனித பிரமிடு அமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். வழக்கமாக அதிகபட்சம் 9 அடுக்கு வரை மட்டுமே மனித பிரமிடு அமைக்கப்படும். இந்தநிலையில் 10 அடுக்கு மனித பிரமிடு அமைக்கப்பட்டது மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மந்திரி பிரதாப் சர்நாயக் கூறுகையில், ‘10 அடுக்கு மனித பிரமிடு அமைக்கப்பட்டது உலக சாதனையாகும்’ என்றார்.
மும்பை மான்கூர்டுவில் நடந்த உறியடி திருவிழாவில் இளைஞர்கள் குழுவினர் மனித பிரமிடு அமைத்தபோது, திடீரென அவர்கள் சரிந்து விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் வெவ்வேறு இடங்களில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் 30 பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.