தண்டனை எனக் கூறி தாயிடம் அத்துமீறிய மகன்: டெல்லியில் கொடூர சம்பவம்
பெற்ற தாய் என்று கூட பாராமல், வாலிபர் அத்துமீறிய செயல் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.;
டெல்லி,
தலைநகர் டெல்லியில் 65 வயது தாயை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 39 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியை அதிரவைத்த இந்த சம்பவம் குறித்து காவல்துறை வெளியிட்ட தகவல்கள் பின்வருமாறு:டெல்லியில் உள்ள ஹவுஸ் காசி பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், மற்ற இரு பிள்ளைகள் மற்றும் கணவருடன் டெல்லியில் வசித்து வந்துள்ளார் அந்தப் பெண்.
கடந்த மாதம் 17ஆம் தேதி, 65 வயது பெண் தனது கணவர் மற்றும் இளைய மகளுடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அவரது மகன் (வயது 39) வீட்டில் தனியாக இருந்துள்ளார். குடும்பத்தினர் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தபோது, அந்த வாலிபர் தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தாய்க்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதனால் உடனடியாக அவரை விவாகரத்து செய்து விடுங்கள் என்றும் தந்தையிடம் கூறியுள்ளார்.
பின்னர், குடும்பத்தினர் வீடு திரும்பிய பிறகு, பெற்ற தாய் என்று கூட பாராமல், அந்த இளைஞர் தனது தாயை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த 65 வயது பெண், திருமணமான தனது மூத்த மகளின் வீட்டிற்கு சென்றார். பின்னர், கடந்த 11ஆம் தேதி மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு திரும்பியதும், அந்த 39 வயது வாலிபர், தனது தாயிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த காலத்தில் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்கு தண்டனையாக இதைச் செய்வதாகக் கூறி, முதலில் பலாத்காரம் செய்த அந்த கொடூரன், பின்னர் அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒரு முறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த அந்த 65 வயது பெண், தனது இளைய மகளுடன் சேர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.