பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர மாநில கவர்னராக உள்ளார்.;

Update:2025-08-17 20:07 IST

மும்பை,

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் செப்டம்பர் மாதம் 9  ஆம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கி நடந்துவருகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி கடைசி நாள் ஆகும்.இந்தப் பதவிக்கு யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து முடிவு எடுக்க  இன்று நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிர கவர்னராக உள்ள சிபி ராதாகிருஷ்னனை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா கூட்டணி சார்பிலும் வேட்பாளரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வாக்களிப்பார்கள். இரு அவைகளிலும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளைவிட அதிக எம்.பி.க்கள் இருக்கிறார்கள். எனவே சிபி ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. செப்டம்பர் 9-ஆம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடும்.

 சிபி ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். 1957ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி திருப்பூரில் பிறந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். முதலில் ஜனதா கட்சியில் இருந்த இவர், பின்னர் பாஜகவில் இணைந்தார். 1998, 1999 ஆகிய மக்களவை தேர்தல்களில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி ஆனார். அதன்பிறகு போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் இரண்டாம் இடம் மட்டுமே கிடைத்தது. 2004 - 2007 காலகட்டத்தில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார். அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார். 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இவர் நியமிக்கப்பட்டார். ஓராண்டுகழித்து கடந்த ஆண்டு மகாராஷ்டிர மாநில கவனராக மாற்றப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்