ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகமே இந்தியாவின் வலிமையை உணர்ந்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு

அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணியாது. அந்த மிரட்டல் இனி எடுபடாது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.;

Update:2025-07-29 18:50 IST

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இந்தியா தரப்பில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி நேற்று விளக்கம் அளித்து பேசினார். இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் பற்றி அவையில் இன்று பேசினார். இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் அவையில் இன்று பேசினர்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி இன்று அவையில் பேசி வருகிறார். அவர் பேசும்போது, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், ஏப்ரல் 22-ந்தேதி, அப்பாவி மக்களின் மதம் என்னவென்று கேட்டு விட்டு, அவர்களை பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற சம்பவம் கொடூரம் வாய்ந்தது. அது கொடூரத்தின் உச்சம். இந்தியாவை வன்முறை தீயில் தள்ளுவதற்கான நன்றாக திட்டமிடப்பட்ட முயற்சி.

இந்தியாவில் வன்முறைகளை பரப்புவதற்கான சதி திட்டமே இது. அந்த சதி திட்டம், ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டு உள்ளது என்பதற்காக நான் நாட்டு மக்களுக்கு இன்று நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

ஏப்ரல் 22-ந்தேதி நான் வெளிநாட்டில் இருந்தேன். உடனடியாக நான் நாடு திரும்பினேன். திரும்பி வந்ததும், கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தினேன். அப்போது, இது நம்முடைய தேசம் தொடர்பான விசயம். பயங்கரவாதத்திற்கு சரியான பதிலடி தரப்பட வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தினேன்.

என் மீது நம்பிக்கை கொண்ட 140 கோடி இந்தியர்களுக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணியாது. அந்த மிரட்டல் இனி எடுபடாது. இந்தியா ஒருபோதும் பயப்படாது.

பாகிஸ்தான் நாட்டின் தொலைதூர பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்திற்கு முழு அளவில் சுதந்திரம் அளிக்கப்பட்டது. எந்த பகுதியில், எப்போது, எப்படி பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என ராணுவமே முடிவு செய்தது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட டிரோன்கள், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. முப்படைகளும் கூட்டாக இணைந்து திட்டமிட்டு செயல்பட்டன. அந்நாட்டின் விமான தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

முன்பு தாக்குதல் நடத்தியவர்கள், அடுத்த தாக்குதலுக்கு திட்டமிட்டனர். ஆனால், தற்போது, பயங்கரவாத தாக்குதல் நடத்த எண்ணுபவர்களுக்கு தூக்கம் போய் விட்டது. இந்த பதிலடிக்கு, இந்தியாவின் தற்சார்பு தொழில் நுட்பங்கள் கைகொடுத்தன. ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகமே இந்தியாவின் வலிமையை உணர்ந்துள்ளது என்று அவர் பேசியுள்ளார். தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோஷத்திற்கு இடையே அவர் பேசி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்