ரூ.11,284 கோடியில் உருவான அதிநவீன நிசார் செயற்கைக்கோள்!
பூமியில் ஒரு செ.மீ. நீள அசைவை கூட மிக துல்லியமாக இந்த செயற்கைக்கோளில் உள்ள அதிநவீன கேமராக்கள் படம் எடுத்து விடும்.;
ஸ்ரீஹரிகோட்டா,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 46 ஆண்டுகளாக, அதாவது 1979-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந்தேதி முதல் பல்வேறு வகையான ராக்கெட்டுகள் மூலம் புவி ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன.
இங்கிருந்து தற்போதுவரை 518 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ந்தேதி ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் இஸ்ரோவின் 100-வது ராக்கெட் ஆகும்.
கிரிக்கெட் போட்டியைப்போல் ராக்கெட் விடுவதிலும் சதம் அடித்த இஸ்ரோ, நாளை புதிய சாதனை ஒன்றை நிகழ்த்த இருக்கிறது. அதாவது, இந்தியா-அமெரிக்கா கூட்டு முயற்சியில், நாசா-இஸ்ரோ செயற்கைத்துளை ரேடார் (நிசார்) என்ற அதிநவீன செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
2,392 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் அதிக பொருட்செலவில், அதாவது ரூ.11,284 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் ஆண்டு பட்ஜெட் இதுவரை ரூ.11,284 கோடியாக (1.3 பில்லியன் டாலர்) உள்ளது. இந்த செயற்கைக்கோளின் விலையும் அதற்கு இணையாக உள்ளது.
இந்த செயற்கைக்கோளின் எடை அதிகம் என்பதால் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்கிறது.
51.7 மீட்டர் நீளம் கொண்ட இந்த ராக்கெட், சென்னையில் இருந்து 135 கி.மீ. கிழக்கே, கடலோரத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும். 19 நிமிடங்களில், வரையறுக்கப்பட்ட வட்டபாதையை செயற்கைக்கோள் அடைந்து விடும்.
இதுவரை ஏவப்பட்ட 500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களைவிட இந்த நிசார் செயற்கைக்கோள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பேரிடர் மேலாண்மை, விவசாயம், காலநிலை கண்காணிப்பு ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் மூலம் துல்லியமாக கணிக்க முடியும். அதாவது, பூமியில் ஒரு செ.மீ. நீள அசைவை கூட மிக துல்லியமாக இந்த செயற்கைக்கோளில் உள்ள அதிநவீன கேமராக்கள் படம் எடுத்து விடும். இந்த படங்களை 12 நாட்களுக்கு ஒருமுறை பூமிக்கும் அனுப்பும்.
இதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் இந்த செயற்கைக்கோளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழல் அமைப்பு இடையூறுகளை தொடர்ந்து கண்காணிக்கும். பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை ஆபத்துகளை மதிப்பிட உதவும்.
குறிப்பாக, பூமியின் மேல் அடுக்கு மற்றும் மேற்பரப்பு இயக்கத்தில் ஏற்படும் நுட்பமான மாற்றங்கள், கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் கண்காணிப்பு, பயிர் நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்து தரவுகள் தரும். இந்த செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெற்றுள்ளன. செயற்கைக்கோள் ஒன்று இவ்வாறு அமைவது இதுவே முதல்முறையாகும்.