உலகின் எந்த தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தும்படி கூறவில்லை: பிரதமர் மோடி
பாகிஸ்தானை நம்பி காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. அரசியலுக்காக பாகிஸ்தானை நம்பி இருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.;
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இந்தியா தரப்பில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி நேற்று விளக்கம் அளித்து பேசினார். இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் பற்றி அவையில் இன்று பேசினார். இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் அவையில் இன்று பேசினர்.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி இன்று அவையில் பேசினார். அவர் பேசும்போது, அமெரிக்க துணை ஜனாதிபதி என்னிடம், பாகிஸ்தான் மிக பெரிய தாக்குதலை நடத்த உள்ளது என கூறினார். அப்படி நடத்தினால், பெரிய அளவில் பதிலடி தரப்படும் என நான் கூறினேன்.
உலகின் எந்த தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தும்படி கூறவில்லை என டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி கூறினார். தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டு கொண்டது. எங்களால் முடியவில்லை. தயவு செய்து தாக்குதலை நிறுத்துங்கள் என பாகிஸ்தான் கதறியது.
நாம் பாகிஸ்தானை மண்டியிட வைத்து விட்டோம். உலகமே இந்திய படைகளை மதிக்கின்றன. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பாராட்டும் மனம் இல்லை. பாகிஸ்தானை நம்பி காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. அரசியலுக்காக பாகிஸ்தானை நம்பி இருக்கிறது.
கடந்த மே 10-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தப்படுகிறது என இந்தியா அறிவித்தது. உலக அளவில் நமக்கு ஆதரவு தரப்பட்டது. துரதிர்ஷ்ட வகையில், துணிச்சல் மிகுந்த நம்முடைய நாட்டின் வீரர்களுக்கு காங்கிரசின் ஆதரவு கிட்டவில்லை. இந்தியா முழு சக்தியுடன், மிகுந்த வேகத்துடன் முன்னேறி வருகிறது என்று பேசியுள்ளார்.