தாக்குதல் நடத்தப்போவதை பாகிஸ்தானிடம் முன்கூட்டியே தெரிவித்தது ஏன்? - ராகுல்காந்தி சரமாரி கேள்வி
போரின் அடிப்படையே நமது பாதுகாப்புத்துறை மந்திரிக்கு தெரியவில்லை என ராகுல்காந்தி பேசினார்.;
புதுடெல்லி,
ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின்போது மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பேசியதாவது;
"பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களை எனது உறவினர்களை இழந்ததாக கருதுகிறேன். தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தினரை சந்தித்து துயரத்தை பகிர்ந்து கொண்டோம். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுகின்றன. இந்திய ராணுவத்திற்கு மலை போன்ற உறுதியான ஆதரவை எதிர்க்கட்சிகள் அளித்தன.
இந்திய ராணுவத்தின் தீரத்தை யாரும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. இந்திய ராணுவத்துடன் கை குலுக்கினாலே தெரியும் அவர்களது பலம். ராணுவத்தை சரியாக பயன்படுத்தும் திறன் 1971இல் இருந்தது .1971இல் ஜெனரல் மனேக்ஷாவுக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முழு சுதந்திரம் கொடுத்தார். ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்ததன் பலனாக பாக். படைகள் நம்மிடம் சரணடைந்தன.
ஆபரேஷன் சிந்தூர் நடக்கும்போதே பாகிஸ்தானை தொடர்புகொண்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என பாகிஸ்தானிடமே அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை தாக்க வேண்டாம் எனக் கூறியது மிகப்பெரிய தவறு. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நமது விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது உண்மை. இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்.
இந்தியா-பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன் என 29 முறை டிரம்ப் கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் டிரம்ப் பொய் சொல்கிறார் என சொல்லும் தைரியம் மோடிக்கு உள்ளதா? பஹல்காம் தாக்குதலின் மூளையான பாகிஸ்தான் ராணுவத் தளபதி, டிரம்ப் உடன் விருந்து சாப்பிடுகிறார். பிரதமர் மோடி டிரம்பிடம் இதை கேட்க முடிந்ததா? தனது இமேஜை பாதுகாக்க ராணுவத்தை பயன்படுத்துகிறார் பிரதமர் மோடி. பாதுகாப்புப் படைகளை தவறாக அவர் பயன்படுத்துவது அபாயகரமானது.
இந்தியப் படைகளின் நகர்வு குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது. ஆனால், சீனா என்ற பெயரையே பாதுகாப்பு மந்திரியும், வெளியுறவு மந்திரியும் சொல்லவில்லை. தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். அவர்களின் கைகளைக் கட்டிவிட்டு போருக்கு அனுப்பக் கூடாது. ஒரு இக்கட்டான சூழலை எப்படி சமாளிப்பது என தெரியாத நிலையில் அரசு உள்ளது. போரின் அடிப்படையே நமது பாதுகாப்புத்துறை மந்திரிக்கு தெரியவில்லை."
இவ்வாறு அவர் பேசினார்.