வயலுக்கு சென்றபோது மறைந்திருந்து தாக்கிய சிறுத்தை... சிறுமி உயிரிழப்பு
புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை, சிறுமியின் கழுத்தை கவ்விப்பிடித்து இழுத்துச்சென்றது.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சேர்ந்த சிறுமி சஞ்சனா(14). இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள விவசாய வயலுக்கு சென்றுள்ளார். அப்போது புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று, திடீரென சிறுமியை தாக்கியது. சிறுமி சுதாரிப்பதற்குள் சிறுத்தை சிறுமியின் கழுத்தை கவ்விப்பிடித்து இழுத்துச்சென்றது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், உடனடியாக விரைந்து வந்து சத்தம் போட்டு சிறுத்தையை விரட்ட முற்பட்டனர். ஒரு கட்டத்தில் சிறுத்தை, சிறுமியை விட்டு அப்பகுதியில் இருந்து வெளியேறியது. சிறுத்தை தாக்கியதில், கழுத்துப் பகுதியில் படுகாயமடைந்த சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உடனடியாக சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. சிறுமியின் குடும்பத்திற்கு உடனடி நிதியுதவியாக ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, அரசாங்க விதிமுறைகளின்படி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர்.