நாடாளுமன்றம் 5 நாட்கள் முடக்கம்: மக்களின் வரிப்பணம் எவ்வளவு வீணடிக்கப்பட்டது தெரியுமா?

கடந்த 5 நாட்களாக நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டுள்ளன.;

Update:2025-07-26 06:02 IST

கோப்புப்படம் 

புதுடெல்லி,

இந்தியாவில் வாழும் 146 கோடி மக்களுக்காக 543 மக்களவை எம்.பி.க்களும், 245 மாநிலங்களவை எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை என 6 மணி நேரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெற வேண்டும். ஆனால், கடந்த 5 நாட்களாக நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டுள்ளன.

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டு வரும் தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அரசிடம் விளக்கம் கோரியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், நாடாளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டமும் நடத்தி வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதத்திற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்ட நிலையில், தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இதனால், 5-வது நாளாக நேற்றும் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது.

எதிர்க்கட்சிகளின் போராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி வரை 21 நாட்கள் நடைபெற வேண்டிய நாடாளுமன்ற கூட்டத்தில் இதுவரை 5 நாட்கள் முடக்கப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் வரிப்பணமும் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது. அதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து காண்போம்:-

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒரு மணி நேரம் கூடுவதற்கு சுமார் ரூ.20 கோடி செலவு செய்யப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு ரூ.33 லட்சம் செலவாகிறது. அந்த வகையில், 6 மணி நேரம் நடைபெறும் ஒரு நாள் கூட்டத்திற்கு ரூ.120 கோடி செலவு செய்யப்படுகிறது. இதைவைத்து பார்க்கும்போது, 5 நாட்கள் நாடாளுமன்ற முடக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால், இதுவரை ரூ.600 கோடி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இனியும் எத்தனை நாட்கள் நாடாளுமன்ற முடக்கம் தொடருகிறதோ, கூடுதலாக ஒவ்வொரு நாளும் ரூ.120 கோடி வீணாகும்.

இனி எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் சலுகை விவரங்களை பார்ப்போம்:-

எம்.பி.க்களுக்கு மாதச் சம்பளம் ரூ.1 லட்சம். தொகுதி நிதி ஆண்டுக்கு ரூ.5 கோடி. நாடாளுமன்ற கூட்டத்தில் ஒருநாள் கலந்துகொண்டால் அதற்கான படி ரூ.2 ஆயிரம். தொகுதியில் மக்களை சந்திக்க மாதப்படி ரூ.70 ஆயிரம். அலுவலக செலவுக்கு மாதம் ரூ.60 ஆயிரம். இதில், ரூ.20 ஆயிரத்தை எழுதுபொருள் வாங்கவும், தபால் செலவுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். மீதமுள்ள ரூ.40 ஆயிரத்தை உதவியாளருக்கு சம்பளமாக வழங்கலாம்.

இதுபோக, செல்போன், இன்டர்நெட் செலவுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம். ஒரு ஆண்டுக்கு 34 முறை விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம். ரெயிலில் என்றால், எப்போது வேண்டுமானாலும் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் இந்தியா முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம். மேலும், உதவியாளர் ஒருவரை 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் இலவசமாக அழைத்துச் செல்லலாம். மேலும், தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடோ, அல்லது தனி வீடோ வழங்கப்படும். ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் வரை மின் கட்டணம் இல்லை. 4 ஆயிரம் கிலோ லிட்டர் தண்ணீரை பயன்படுத்திக்கொள்ளலாம். எம்.பி.க்கும், அவரது குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வசதியும் உண்டு.

Tags:    

மேலும் செய்திகள்