கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று கால்வாயில் உடலை வீசிய பெண் - வெளியான பரபரப்பு தகவல்
கணவருக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.;
தாவணகெரே,
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா தியாகடகட்டாவை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும் சன்னகிரி தாலுகா அன்னபுரா கிராமத்தை சேர்ந்த நிங்கப்பாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் தம்பதி மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் நிங்கப்பாவுக்கு குறைபாடு இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி லட்சுமிக்கு தெரியவந்தது. நிங்கப்பா பாக்கு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அவருடன் திப்பேஷ் நாயக், சந்தோஷ் ஆகியோரும் அதே வேலையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் திப்பேஷ் நாயக்குடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இதனால் லட்சுமி கர்ப்பமானார். தனக்கு குழந்தை பெறுவதில் குறைபாடு இருக்கும் நிலையில், மனைவி லட்சுமி கர்ப்பமானதால் நிங்கப்பா சந்தேகம் அடைந்தார். இதனால் லட்சுமி வயிற்றில் உருவான கருவை அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கலைத்துள்ளார். இதனால் லட்சுமி ஆத்திரம் அடைந்தார். மேலும் கணவரை தீர்த்துக்கட்ட அவர் திட்டமிட்டார். இதுபற்றி அவர் கள்ளக்காதலன் திப்பேஷ் நாயக்கிடம் கூறினார்.
அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதி திப்பேஷ் நாயக், விருந்து வைப்பதாக கூறி லட்சுமியுடன் நிங்கப்பாவை சன்னகிரி தாலுகா நல்லூர் கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நிங்கப்பாவுக்கு அளவுக்கு அதிகமாக இருவரும் மது கொடுத்துள்ளனர். இதில் அவர் போதை தலைக்கேறி மயங்கினார்.
இதையடுத்து நிங்கப்பாவை லட்சுமியும், திப்பேஷ் நாயக்கும் சேர்ந்து கல்லால் தாக்கி கொன்று பத்ரா கால்வாயில் வீசினர். அதன்பிறகு லட்சுமி தனது கணவர் பத்ரா கால்வாயில் குளிக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அதன்பிறகு அவரது உடலை தேடும் பணி நடந்தது. இருப்பினும் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன்பிறகு திப்பேஷ் நாயக், கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கேயே வாடகைக்கு வீடு பார்த்த அவர், லட்சுமியையும் அங்கேயே அழைத்து தங்கவைத்தார். லட்சுமி கேரளாவுக்கு சென்றதை யாரிடமும் கூறவில்லை. இதனால் அவர் மாயமாகிவிட்டதாக குடும்பத்தினர் சன்னகிரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் திப்பேஷ் நாயக்கின் நண்பரான சந்தோசை பிடித்து விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அதாவது லட்சுமிக்கும், திப்பேஷ் நாயக்குக்கும் ஏற்கனவே கள்ளக்காதல் இருந்ததும், லட்சுமி கர்ப்பமானதும், கருவை நிங்கப்பா கலைத்ததும், இதனால் லட்சுமியும், திப்பேஷ் நாயக்கும் சேர்ந்து நிங்கப்பாவை கொன்று பத்ரா கால்வாயில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து கேரளாவுக்கு விரைந்த சன்னகிரி போலீசார், லட்சுமி, கள்ளக்காதலன் திப்பேஷ் நாயக் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.