போதை பொருள் கலந்த குளிர்பானம், வீடியோ... மாணவிக்கு ராகிங் கொடுமை

விடுதியில் கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவிக்கு போதை பொருள் கலந்த குளிர்பானம் மற்றும் கேக் கொடுக்கப்பட்டு உள்ளது.;

Update:2025-07-30 07:43 IST

டோங்க்,

ராஜஸ்தானின் டோங்க் நகரில் பனஸ்தளி வித்யாபீடம் என்ற பெயரில் தனியார் கல்வி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏறக்குறைய 90 ஆண்டுகள் பழமையான இந்த மையம் பின்னர் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றது. மாணவிகள் மட்டுமே படிக்க கூடிய இந்த பல்கலைக்கழகம், கலாசாரத்துடன் கூடிய நவீன கல்வியை வழங்கும் நோக்கம் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த கல்வி மையத்தின் விடுதி கட்டிடத்தில் இருந்து, எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அரியானாவை சேர்ந்த அவர்கள் போலீசில் புகார் அளித்து, எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதில், அந்த மாணவிக்கு சக மாணவிகளால், போதை பொருள் கலந்த குளிர்பானம் மற்றும் கேக் கொடுக்கப்பட்டு உள்ளது. விடுதியில் கொண்டாட்டம் என்ற பெயரில் இதுபோன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து, பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை அந்த மாணவி கூறியதுடன், வீடியோ எடுத்து தன்னை மிரட்டுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இதன்பின்னரே அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார் என புகார் தெரிவிக்கின்றது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் பரவி வருகிறது. அந்த மாணவியை மற்ற மாணவிகள் அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதனால், அவருடைய மன சமநிலையில் பாதிப்பு ஏற்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளார் என புகார் தெரிவிக்கின்றது.

இதுபற்றி காவல் ஆய்வாளர் ராம்ஜி லால் வர்மா கூறும்போது, புதிதாக வந்த மாணவியை மற்ற மாணவிகள் ராகிங் கொடுமை செய்துள்ளனர் என தெரிகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

ராகிங்கிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளபோதும், முதலாம் ஆண்டு படிக்க வரும் மாணவ மாணவிகள் இதுபோன்ற ராகிங் கொடுமைக்கு ஆளாவது பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்