அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 574 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 574 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்பப்பதிவையும் தொடங்கி வைத்தார்.;
AI Image for representation
சென்னை,
சென்னை ராணிமேரி கல்லூரியில் 105-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். மேலும், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 574 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்பப்பதிவையும் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாணவர்களின் தேவைக்கேற்ப 15 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. இதில், நிரந்தர ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணவர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க 574 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கு, www.tngasa.org. என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பட்டமளிப்பு விழாவுக்காக மாணவிகள் காலை 8 மணிக்கே கல்லூரிகளுக்கு வரவழைக்கப்பட்டனர். நிகழ்ச்சி 11 மணியளவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், அமைச்சர் வர காலதாமதம் ஆனதால், 3 மணி நேர தாமதமாக மதியம் 1 மணிக்கு பிறகு நிகழ்ச்சி தொடங்கியது. இதனால், மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.