வரகூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்- வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

கோவில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் சுவாமி எழுந்தருளியதும் உறியடி உற்சவம் மற்றும் வழக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2025-08-18 11:18 IST

வழுக்கு மரம் ஏறிய பக்தர்கள்

திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில். இங்கு ஆண்டுதோறும் உறியடி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் உறியடி உற்சவம் கடந்த 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உறியடி தினமான நேற்று பகல் வெண்ணை குடத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவிற்கு பின்னர் சுவாமி கடுங்கால் கரையில் உள்ள காளிந்தி மண்டபத்தில் எழுந்தருளினார்.

இன்று அதிகாலை வெள்ளி சட்டத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு காளிந்தி மண்டபத்திலிருந்து நாதஸ்வர இன்னிசை முழங்க கோவிலை நோக்கி கிளம்பினார். சுவாமி பல்லக்கின் பின்னால் ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணமாக கோவில் நோக்கி வந்தனர். கோவில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் சுவாமி எழுந்தருளியதும் உறியடி உற்சவம் தொடங்கியது.

அந்தரத்தில் ஆடிய உறியை பக்தர்கள் லாவகமாக பிடித்து அதிலிருந்து பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்கினார்கள். அதன்பின்னர் சுவாமி வழுக்கு மரத்தின் பக்கம் பார்த்து திருப்பி வைக்கப்பட்டு, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி தொடங்கியது. ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் வழுக்கு மரம் ஏறுவதில் ஈடுபட்டனர். சூழ்ந்து நின்ற பக்தர்கள் ஊற்றும் தண்ணீரை பொருட்படுத்தாமல் லாவகமாக வழக்கு மரத்தின் மீது ஏறிச்சென்று அதன் உச்சியில் கட்டப்பட்டிருந்த முறுக்கு உள்ளிட்ட பொருட்களை எடுத்து கீழே நின்ற பக்தர்களுக்கு வீசினர். உச்சியில் கட்டப்பட்டிருந்த முடிச்சை எடுத்து வந்து சுவாமியிடம் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.

இன்று ருக்மணி கல்யாணத்துடன் உறியடி உற்சவம் நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்