திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்.. 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் வரிசையில் சென்ற பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி சென்றனர்.;

Update:2025-08-17 16:00 IST

திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். கடந்த 15-ந் தேதி முதல் இன்று வரையில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்தது. பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் கூட்டமானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது.

கோவிலில் கலையரங்கம் பகுதியில் கட்டண தரிசன வழியில் செல்லும் பக்தர்களுக்கு என சிறப்பு வரிசை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர்.

பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் வரிசையில் சென்ற பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி சென்றனர். கோவிலில் வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

மேலும் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் தனித் தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர்.  கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்