திருப்பதி கோவில்களில் கோகுலாஷ்டமி விழா

ஜென்மாஷ்டமி விழாவின் ஒரு பகுதியாக, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுடன் இணைந்த கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.;

Update:2025-08-17 11:40 IST

பெரிய சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் வீதி உலா 

திருப்பதியில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா (கோகுலாஷ்டமி விழா) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுடன் இணைந்த கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர் மாலையில் பெரிய சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோபூஜை மற்றும் ஆஸ்தானமும் நடைபெற்றது.

இதேபோல் கோவிந்தராஜ சுவாமி கோவில், நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில், சந்திரகிரி ராமாலயத்தில் உள்ள வேணுகோபால சுவாமி, கபிலதீர்த்தம் மற்றும் கார்வேட்டி நகரில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும், திருமலை அருகே கோகர்பம் அணைக்கரை பூங்காவிலும் கோகுலாஷ்டமி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதையொட்டி கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

கோகர்பம் அணைக்கரையில் அமைந்துள்ள பூங்காவில் காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு காலை அபிஷேகமும், உறியடி உற்சவமும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பூங்கா துணை இயக்குனர் சீனிவாஸ் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவாசலில் நேற்று இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை உக்ரசீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள், ஸ்ரீகிருஷ்ணருக்கு திருமஞ்சனம், ஆராதனை, பிரபந்த சாத்துமுறை, கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடந்தது.

இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கோவில் எதிரே உறியடி உற்சவம் நடக்கிறது. உற்சவர் மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்திலும், ஸ்ரீகிருஷ்ணர் மற்றொரு தங்கத் திருச்சி வாகனத்திலும் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

உறியடி உற்சவத்தால் கோவிலில் நடக்க இருந்த ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்