திருத்தணி முருகன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடி கிருத்திகை விழா
பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா முழக்கத்துடன் முருகப் பெருமானை வழிபட்டனர்.;
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 14-ந்தேதி ஆடி அஸ்வினியுடன் தொடங்கி நடைபெற்று வரும் விழாவில் நேற்று முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மலர் காவடி, மயில் காவடிகள் எடுத்து வந்தும், அலகு குத்தியும் அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் முருக பெருமானை வழிபட்டனர்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு தங்க கவசம், பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவிக்கப்பட்டது. நேற்று மாலை தெப்பத்திருவிழா நடந்தது.
சரவணப்பொய்கையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்ர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆடிக்கிருத்திகை விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். அப்போது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சரியாக செய்துள்ளதா என பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறும்போது, “கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெறும் 5 நாட்களுக்கு தரிசனத்திற்கு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.
நடிகை ரோஜா திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி மற்றும் வெள்ளி வேல் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.