ஆவணி மாத பிறப்பு... சீர்காழி சட்டைநாதர் கோவிலில் சிறப்பு கோ பூஜை
கோ பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் பசுவுக்கு வாழைப்பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வணங்கினர்.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள் பாலிக்கிறார். இங்கு ஆவணி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது.
இதையொட்டி கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் வகை பசு மற்றும் கன்றுக்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பசுவுக்கு வாழைப்பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கி வழிபட்டனர்.