கன்னியாகுமரி ஏகாட்சர மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது
விநாயகர் சதுர்த்தி நாளன்று சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.;
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து விழா நடக்கிறது.
திருவிழாவிற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று இரவு நடந்தன. திருவிழாவின் முதல் நாளான இன்று காலையில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு மேளதாளங்கள், பஞ்ச வாத்தியங்கள், மங்கள இசை முழங்க காலை 10 மணிக்கு கொடியேற்றப்பட்டது. சங்கர் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் கொடி ஏற்றி வைத்தனர். கொடி ஏற்றப்பட்ட பிறகு கொடி மரத்துக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு நாணல் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர துணைத் தலைவி நிவேதிதா, பொதுச் செயலாளர் பானுதாஸ், இணை பொதுச் செயலாளர் ரேகாதவே, மக்கள் தொடர்பு அலுவலர்கள் கிருஷ்ணகுமார், ரகுநாதன் நாயர், கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 6-ம் நாள் திருவிழாவான 23-ந்தேதி இரவு 7 மணிக்கு108 கும்ப கலச முதல் கால பூஜைகள் தொடங்குகின்றன. 7-ம் நாள் திருவிழாவான 24-ந்தேதி காலை 9 மணிக்கு 108 கலச அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தி நாளன்று (27-ந்தேதி) காலை 9.30 மணிக்கு விநாயகருக்கு யாக கலச அபிஷேகமும், அஷ்ட கலச அபிஷேகமும் நடக்கிறது. 10.30 மணிக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடக்கின்றன. மாலை 5 மணிக்கு மங்கள இசையும் சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் உற்சவமூர்த்திக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 6.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் (28-ந்தேதி) காலையில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, பொதுச்செயலாளர் பானு தாஸ், இணை பொதுச் செயலாளர்கள் ரேகா தவே, கிஷோர், பொருளாளர் பிரவீன் தபோல்கர், கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன் மற்றும் விவேகானந்த கேந்திர நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.