நாளை அஜா ஏகாதசி: விரதம் இருந்து பகவானை வழிபடுவது எப்படி?
அஜா ஏகாதசியில் விரதம் இருந்து பகவானை வழிபட்டால் முன் ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.;
பெருமாளை வழிபடுவதற்கு உகந்த தினம் ஏகாதசி ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் ஏகாதசி திதி வரும். ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்து வழிபடுவதால் பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஒவ்வொரு ஏகாதசி விரதமும் தனித்துவமான பலன்களை அளிக்கவல்லது. அவ்வகையில் அஜா ஏகாதசியில் விரதமிருந்தால் முன்வினைப்பயன் மற்றும் தீவினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இது முன் ஜென்மங்களில் செய்த பாவங்களை நீக்கக்கூடிய அற்புதமான விரதமாகும்.
இந்த விரதத்தை கடைப்பிடித்த ஹரிச்சந்திர மகாராஜாவின் வினைப்பயன்கள் நீங்கியதாகவும், இறந்து போன தன்னுடைய மகனின் உயிரையும், இழந்த ராஜ்யத்தையும் மீண்டும் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஏகாதசியில் விரதம் இருந்து பகவானை வழிபட்டால் அளவில்லாத செல்வ நலன்கள் கிடைக்கும், பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவர் ஒருவர் தொடர்ந்து அஜா ஏகாதசி விரதத்தை கடைபிடிக்கிறாரோ அவருக்கு இறுதியில் வைகுண்ட பதவியும் கிடைக்கும் என்கிறார்கள்.
இத்தகைய சிறப்புகளையுடைய அஜா ஏகாதசி தினம் நாளை (19.8.2025) வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்ல பலன்களை தரும். இன்று (18.8.2025) மாலை 6.40 மணி முதல் நாளை (19.8.2025) மாலை 4.42 மணிவரை ஏகாதசி திதி உள்ளது. விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று, அதாவது இன்று கடைசி உணவை சூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்.
ஏகாதசி விரதத்தின் மிக முக்கியமான அங்கம் தானியங்களால் ஆன உணவை எவ்வகையிலும் உண்ணாமல் இருப்பதேயாகும். குறிப்பாக அரிசி, சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்ணக்கூடாது. நவ தானியங்களால் செய்யப்பட்ட உணவு களும், பருப்பு வகைகளும், பயறு வகைகளும் (கடுகு உளுந்தம் பருப்பு தாளித்துக் கொட்டுதல் உட்பட) ஏகாதசி அன்று முற்றிலும் விலக்கப்பட வேண்டும். காய்கறிகளில் மொச்சை, பீன்ஸ், அவரை போன்ற பயறு வகைகளைச் சேர்ந்த காய்களும் விலக்கப்பட வேண்டும்.
சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான பசு நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்றெல்லா எண்ணெய் வகைகளும் விலக்கப்பட வேண்டும். இத்தனை கவனம் தேவைப்படுவதால் தீவிர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் (நிர்ஜல ஏகாதசி) ஏகாதசி விரதம் கடைபிடிப்பார்கள். அது முடியாதவர்கள் துளசி தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் பசும்பால், தயிர், பழங்கள் மட்டும் உட்கொண்டு விரதம் இருக்கலாம். அதுவும் முடியாதவர்கள் சமைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பெருமாளுக்கு வாசனை மலர்கள் சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத் கீதை ஆகியவற்றை இந்த நாளில் பாராயணம் செய்வது சிறப்பு. பெருமாளின் திருநாமங்களை உச்சரித்தபடி இருப்பது சிறப்பு. துவாதசியில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.