சஷ்டி விரதம் மற்றும் பூஜை முறைகள்
உடல்நிலையை கருத்தில் கொண்டு முழு உபவாசம் அல்லது குறிப்பிட்ட நேரம் உபவாசம் இருந்து முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யலாம்.;
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சஷ்டி விரதம், வழிபட்டால் முருகப் பெருமான் அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விழாவின்போது பெரும்பாலான பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். ஆனால் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதந்தோறும் வரும் சஷ்டி நாட்களிலும் விரதம் இருந்து வழிபடலாம்.
வளர்பிறை திதியில் ஒன்று, தேய்பிறை திதியில் ஒன்று என மாதத்திற்கு இரண்டு முறை சஷ்டி தினம் வருகிறது. இந்த இரண்டு தினங்களிலும் விரதம் இருந்து முருகப்பெருமானுக்குரிய நைவேத்யங்களை படைத்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பிரார்த்தனை செய்யலாம்.
குழந்தை இல்லாதவர்கள், வறுமையில் வாடுபவர்கள், தொழிலில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பவர்கள், நோய் குணமாக வேண்டும் என்பவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மை பெற வேண்டுபவர்கள் என எந்த பிரச்சினைகள் என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற முருகப்பெருமானின் அருள் வேண்டி மாதந்தோறும் சஷ்டி விரதம் இருக்கலாம்.
விரதம் இருக்கும் முறை :
சஷ்டி விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு, விளக்கேற்றி, வீட்டில் உள்ள முருகப் பெருமானின் திருவுருவப் படத்திற்கு செவ்வந்திப் பூ அல்லது ஏதோ ஒரு வெள்ளை நிறப் பூ அணிவிக்க வேண்டும்.
நைவேத்யமாக காய்ச்சிய பாலுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து வைக்கலாம். அதோடு இரண்டு வாழைப்பழங்கள் (வேறு வகையான பழங்களும் சேர்த்து வைக்கலாம்), வெற்றிலை பாக்கு வைத்து மனமுருகி பிரார்த்தனையை முருகப் பெருமானிடம் முறையிட்டு விரதத்தை துவக்க வேண்டும். முடிந்தால் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது நல்லது.
ஒரு வேளை சாப்பிடாமலோ அல்லது இரண்டு வேளையும் சாப்பிடாமலோ அல்லது பழம் மற்றும் பால் மட்டும் சாப்பிட்டுக் கொண்டோ விரதம் இருக்கலாம். உடல்நிலையை கருத்தில் கொண்டு எந்த முறையில் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம்.
மாலையில் வீட்டில் சட்கோண கோலம் அமைத்து அதில் 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்ற வேண்டும். ஆறும் நெய் தீபமாக ஏற்றலாம் அல்லது ஒரு தீபமாவது நெய் தீபம் ஏற்ற வேண்டும். நைவேத்தியமாக காய்ச்சிய பால், பழம் வைத்து வழிபட வேண்டும். பூஜைகளை முடித்த பிறகு நைவேத்தியமாக வைத்துள்ள பாலை குடித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.