பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்.. 20-ம் தேதி பாலாலயம்
பாலாலயம் என்கிற நிகழ்வும் ஒரு சிறிய அளவிலான கும்பாபிஷேகத்தைப் போலவே நடைபெறும்.;
கோவிலை பார்வையிட்ட அதிகாரிகள்
பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், மீண்டும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின்பேரில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் கோவிலில் நடைபெற்றது. சிறுவாபுரி முருகன் கோவில் மற்றும் பொன்னேரி ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில் கூடுதல் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மாதவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கும்பாபிஷேகம் செய்வதற்கான புனரமைப்பு பணிகள் குறித்து உபயதாரர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மஹா கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னர் ஆலயத்தில் உள்ள மூர்த்தங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையில் உருவம் வரைந்து அதன் மீதோ அல்லது உற்சவர் விக்கிரகத்தின் மீதோ மாற்றுவார்கள். அதாவது மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களின் சக்தியை அந்த தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட அத்திப்பலகையின் மீது மாற்றி அந்தப்பலகையை ஆலய வளாகத்திற்குள் குடில் அமைத்து அங்கே வைத்து நித்தியப்படி பூஜையை தவறாமல் செய்வது என்றும். அதன்பிறகு மூலஸ்தானத்திற்குள் புனரமைப்பு பணிகளை தொடங்குவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையின் மீதோ, உற்சவ விக்கிரகங்களின் மீதோ மாற்றுகின்ற நிகழ்வு பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்று அழைக்கப்படுகிறது. பாலாலயம் நடைபெற உள்ள சாந்நித்யம் பெற்ற அத்திப்பலகையையோ அல்லது உற்சவர் விக்ரகத்தையோ வைத்து நித்யப்படி பூஜைகளையும், தீபாராதனைகளை மேற்கொள்வார்கள். கும்பாபிஷேகம் செய்யும்போது இந்த அத்திப்பலகையில் உள்ள சாந்நித்யத்தை யாகசாலையில் வைக்கப்பட்டிருக்கும் கும்ப கலசங்களில் சிவாச்சாரியார்கள் மாற்றுவார்கள். யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கும்ப கலசங்களில் உள்ள நீரை மூலவர் மற்றும் இதர தெய்வங்களின் சிலைகளின் மீது அபிஷேகம் செய்யும்போது அந்தச் சிலைகள் மீண்டும் சாந்நித்யம் பெறும்.
பாலாலயம் என்கிற நிகழ்வும் ஒரு சிறிய அளவிலான கும்பாபிஷேகத்தைப் போலவே நடைபெறும். அவ்வகையில், பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் வருகிற 20ஆம் தேதி புதன்கிழமை காலை 9.15 முதல் 11 மணிக்குள்ளாக சுபமுகூர்த்தத்தில் பிரதோஷ நல்ல நாளில் பாலாலயம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.