திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம்
மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பவித்ர பிரதிஷ்டை நடைபெற்றது. இதற்காக ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, பவித்ர மண்டபத்தில் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு வைதீக காரியக்கிரமங்கள், ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் சம்பங்கி பிரகாரத்தில் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதே நேரத்தில் வேத பண்டிதர்கள் பஞ்ச சூக்தங்களை பாராயணம் செய்தனர். பின்னர் பவித்ர பிரதிஷ்டை நடந்தது. மதியம் சுவாமி மற்றும் தாயார்களுக்கு விசேஷ சமர்ப்பணம் செய்யப்பட்டது.
மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோவில் நான்கு மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவில் யாகசாலையில் வைதீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.