கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா
சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய உற்சவ தெய்வங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.;
ஈரோடு கோட்டையில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 63 நாயன்மார்கள் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
நேற்று காலையில் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். பின்னர் அந்த தீர்த்தம் மூலம் பஞ்சமூர்த்திகளுக்கும், 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வாரணாம்பிகை உடனமர் சோமாஸ்கந்தா், அம்பாள், வள்ளி-தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், விநாயகர், 63 நாயன்மார்கள் ஆகிய உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் எழுந்தருளினர்.
கோவிலில் இருந்து திருவீதி உலா தொடங்கியது. ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலில் திருவீதி உலா நிறைவு பெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவீதி உலாவின்போது சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகம், நால்வர் தேவாரம் ஆகிய பாடல்களை பாடினர்.