கண்ணகி வீடுபேறு அடைந்த நாள்: பூம்புகார் கோவிலில் சிறப்பு பூஜை
கண்ணகி சிலைக்கு மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.;
கற்புக்கரசி என அழைக்கப்படும் கண்ணகி பூம்புகார் பகுதியில் பிறந்து வளர்ந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சிலப்பதிகார வரலாறு கூறுகின்றது. இவருக்கு பூம்புகார்-மேலையூரில் கோவில் உள்ளது. கண்ணகி ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத்தன்று, பூ பல்லக்கில் அமர்ந்து விண்ணுலகம் சென்றதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. எனவே, ஆடி மாத அனுஷ நட்சத்திர நாளில் கண்ணகி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
அவ்வகையில் இந்த ஆண்டு ஆடி மாத அனுஷ நட்சத்திர தினமான நேற்று கண்ணகி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கண்ணகி சிலைக்கு மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரமும், அர்ச்சனைகளும் நடந்தன.
இதையடுத்து கண்ணகி கோட்ட காப்பாளர் ராஜசேகரன் தலைமையில் பூம்புகார் அரசு மருத்துவர் யோக பிரியா சிலம்பின் பெருமைகள் குறித்து பேசினார். கண்ணகி குறித்த பாடல்களை பெண்கள் பாடினார்கள். சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.