தேவகோட்டை: முத்துமாரியம்மன் கோவில் ஆடி உற்சவ விழா.. பால்குட ஊர்வலம்
பால்குட ஊர்வலம் கோவிலை அடைந்ததும், பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
தேவகோட்டை ஸ்ரீரெங்கபுரம் அருணகிரிபட்டினத்தில் இந்து அறநிலைத்துறை சார்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி உற்சவ விழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் 119-வது ஆண்டு ஆடி உற்சவ விழா கடந்த மாதம் 29-ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காப்பு கட்டியபின் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் சத்திரத்தார் ஊரணியில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவில் வந்தடையும்.
ஒவ்வொரு நாளும் வெள்ளி அங்கி திரு அலங்காரம், தேவி கருமாரியம்மன், ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, இந்திராணி, காமாட்சி போன்ற அலங்காரத்தில் அம்மன் காட்சி தருகிறார். நேற்று இரவு சத்திரத்தார் ஊரணியில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் சக்தி கரகம் எடுத்து வந்தனர்.
இன்று காலை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. கருதாவூரணி விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடங்களை சுமந்தபடி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். சிலர் பறவைக் காவடி எடுத்தும், வேல் குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் வந்தனர். இந்த ஊர்வலம் கோவிலை அடைந்ததும், அனைவரும் கோவில் முன்பாக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.