வரலட்சுமி விரத பூஜை... திருச்சானூர் கோவிலில் விரிவான ஏற்பாடுகள்

வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்கும் பெண் பக்தர்களுக்கு அட்சதை, குங்குமம், வளையல்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்படும்.;

Update:2025-08-06 16:17 IST

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை மறுதினம் (8.8.2025) காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை, கோவில் ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரத பூஜை பாரம்பரிய முறைப்படி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

வரலட்சுமி விரத பூஜையையொட்டி கோவிலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில், ஆஸ்தான மண்டபம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளை பலவண்ண மலர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்தான மண்டபம் மற்றும் மாட வீதிகளில அழகாக கோலங்கள் வரையப்பட்டுள்ளன.

பக்தர்கள் வரிசையில் சென்று சிரமம் இன்றி தாயாரை தரிசனம் செய்வதற்காக சிறப்பு தரிசன பாதை அமைக்கப்பட்டுள்ளது. அன்னபிரசாதம் மற்றும் குடிநீர் வசதிகளை தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார வசதியில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. கோவிலின் சுற்றுப்புறங்களிலும் அருகிலுள்ள சாலைகளிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பக்தர்கள் வரலட்சுமி விரத பூஜையை காண்பதற்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் (SVBC) தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கோவிலைச் சுற்றி எல்இடி திரைகள் அமைக்கப்படுகின்றன.

வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்கும் பெண் பக்தர்களுக்கு அட்சதை, குங்குமம், வளையல்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்படும்.

வரலட்சுமி விரத பூஜையையொட்டி அபிஷேகம், அபிஷேக அனந்தர தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாணோற்சவம், பிரேக் தரிசனம் மற்றும் ஊஞ்சல் சேவை போன்ற வழக்கமான சேவைகள் அன்றைய தினம் ரத்து செய்யப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்