ராமதாஸ் தலைமையில் இன்று பாமக மகளிர் மாநாடு
பூம்புகாருக்கு நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து டாக்டர் ராமதாஸ் காரில் புறப்பட்டார்.;
சீர்காழி,
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவுரைப்படி பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையை போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் பெருவிழா மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை பூம்புகாரில் நடக்கிறது.மாநாட்டில் சரஸ்வதி ராமதாஸ், ஜி.கே. மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.
பூம்புகாரில் இன்று மாலை மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ள நிலையில் மாநாடு ஏற்பாடுகளை நேற்று இரவு பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ் பார்வையிட்டார்.அப்போது ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தஞ்சை மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பாக்கம் சக்திவேல்,மண்டல செயலாளர் எஸ்.ஏ. அய்யப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.பூம்புகாரில் பா.ம.க. மகளிர் பெருவிழா மாநாடு நடக்க உள்ள நிலையில் 41 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு:-
மாநாடு நடைபெறும் இடத்தில் தீயணைப்பு மற்றும் மருத்துவ உதவி அளிக்கும் வாகனங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரட்டை அடுக்கு தடுப்புகள் அமைப்பது, அவசர சூழ்நிலைகளின்போது மாநாடு நடைபெறும் பகுதியில் இருந்து விரைவாக வெளியேற போதுமான எண்ணிக்கையில் நுழைவுவாயில் அமைக்க வேண்டும்.
மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் வந்து செல்ல தடை செய்யப்பட்ட வழித்தடமான மணல்மேடு, பட்டவர்த்தி, வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் திருவெண்காடு, நெய்தவாசல், தர்மகுளம் ஆகிய இருவழித்தடங்களை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்பட 41 நிபந்தனைகளை போலீசார் விதித்து உள்ளனர்.