பருவதமலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சென்னை பெண் சடலமாக மீட்பு

பருவதமலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.;

Update:2025-08-11 09:03 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென்மாதிமங்கலம்- கடலாடி கிராமங்களுக்கு இடையே சுமார் 4,560 அடி உயரம் கொண்ட பருவதமலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாத பவுர்ணமி தினத்திலும் மற்றும் வார விடுமுறை நாட்களிலும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சென்னை வடபழனியை சேர்ந்த தங்கதமிழ்செல்வி (வயது 36), சென்னை திருவேற்காட்டை சேர்ந்த மனோகரன் மனைவி இந்திரா (58) உள்பட15 பேர் கொண்ட குழுவினர் பருவத மலைக்கு வந்தனர். பின்னர் மலை மீது ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று மாலை மலையில் இருந்து இறங்கி வந்தனர். அப்போது அப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதனால் மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் உள்ள பச்சையம்மன் கோவிலில் இருந்து வீரபத்திரன் கோவில் இடையே செல்லும் மழை கால்வாயில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் இந்த கால்வாயை கடக்க முயற்சி செய்து ஒருவர் பின் ஒருவராக கையை கோர்த்து பிடித்துக் கொண்டு வெள்ளத்தில் இறங்கி கடந்து வந்தனர்.

அப்போது தங்கதமிழ்ச்செல்வி, இந்திரா ஆகிய இருவரும் திடீரென நிலை தடுமாறினர். இதில் அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் அவர்களுடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடலாடி போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், பருவதமலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த இந்திரா என்பவரின் உடல் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பின்னர் இந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மற்றொருவரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிபாளர் முகாமிட்டுள்ளனர். மேலும் பருவதமலைக்கு செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்