செப்டம்பர் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரம் விரிவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.;
சென்னை,
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து, மொத்தம் ரூ.18,498 கோடி மதிப்பிலான தொழில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மீண்டும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு உள்ளார். வருகிற 31-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு முதல்-அமைச்சர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரம் விரிவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடு பயணத்தின்போது தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை முதல்-அமைச்சர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புகளின் மூலம், தமிழகத்தில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்துவதற்கும் முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள முன்னணி தொழிலதிபர்களைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளதாகவும், இந்தப் பயணத்தில் முதல்-அமைச்சருடன், தலைமைச் செயலர் முருகானந்தம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் பல முக்கிய அரசு அதிகாரிகள் உடன் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.