கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் சூலூர் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் சூலூர் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update:2025-08-11 09:50 IST

கோவை,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை சென்னையில் கொலை செய்து காரில் கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் கல்லைகட்டி போட்டனர். விசாரணையில் 2 மாதங்களுக்கு முன்பு இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. அந்த உடல் எலும்புக்கூடாக காணப்பட்டது.

இந்த கொலையை செய்ததாக பாளையங்கோட்டையை சேர்ந்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோர் செட்டிப்பாளையம் போலீசில் சரண் அடைந்தனர். அதன்பின்னர்தான் கொலை விவகாரம் வெளி உலகுக்கு தெரியவந்தது. சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, செட்டிப்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

இந்த கொலை வழக்கில் முருகப்பெருமாள் சரண் அடைந்தாலும், அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்று தெரிகிறது. இந்த கொலையை பாளையங்கோட்டையை சேர்ந்த நியூட்டன் (வயது28), பெனிட்டோ (29) ஆகியோர் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. உடனே அந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கில் தொடர்பு இல்லாத முருகப்பெருமாள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தாமல், அவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்த விவகாரம் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து டி.ஐ.ஜி. சசிமோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் முருகப்பெருமான் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் சரியாக விசாரணை நடத்தவில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டார். கொலை வழக்கை சரியாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்