ஜெயலலிதாவுடன் பிரேமலதா உள்ளது போல படத்தை பதிவிட்ட எல்.கே சுதிஷ்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
திமுக, அதிமுகவை சம தூரத்தில் வைத்து பார்ப்பதாக பிரேமலதா கூறிய நிலையில், சுதிஷ் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.;
புதுடெல்லி,
மாநிலங்களவை இடம் ஒதுக்குவதில் அதிமுக மற்றும் தேமுதிக இடையே பிணக்கு ஏற்பட்டது. இதையடுத்து யாருடனும் கூட்டணி இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். வரும் ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில்தான் கூட்டணி யாருடன் என்று அறிவிப்போம் என்று கூறி வரும் பிரேமலதா விஜயகாந்த், நாங்கள் இடம் பெறும் கூட்டணிதான் வரும் தேர்தலில் வெற்றி பெறும் எனப்பேசி வருகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியை பலப்படுத்தும் நோக்கில், உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் நடைப்பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார். இதனால், திமுக பக்கம் தேமுதிக சாய்கிறதா என்ற கேள்வி எழுந்ததற்கு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரேமலதா பதில் அளித்திருந்தார். இதற்கு மத்தியில், அண்மையில் திருப்பத்தூரில் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய கேசி வீரமணி அதிமுக நலன் கருதியே சந்தித்தாக கூறியது. தேமுதிகவை தங்கள் கூட்டணியில் தக்க வைக்கும் முயற்சியாகவே அதிமுக முன்னாள் அமைச்சர், பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த்தாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இத்தகைய சூழலில், தேமுதிகவின் எல்.கே சுதிஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் பிரேமலதா விஜயகாந்த் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். எல்.கே சுதிஷின் இந்த பேஸ்புக் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.